ஒரு நாட்டைப் பொருத்தமட்டில், அந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவோ, பொதுமக்களின் உயிர்களுக்கோ, சொத்துகளுக்கோ இடையூறு, பெரிய அளவிலான சேதம் உண்டாக்குபவர்களை நாம் 'தீவிரவாதிகள்', என்று அடையாளப்படுத்துவதுண்டு. ஆனாலும், வெடிகுண்டு வைப்பவர்கள் மட்டும் தீவிரவாதிகள் அல்ல. ஒரு தேசத்தை சிறிது சிறிதாக அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் எவரையும் தீவிரவாதிகள் என்று சொல்லலாம். அந்த வகையில், நமது இந்தியாவைப் பொறுத்த மட்டில் அரசு உதவித் தொகையில் படித்து விட்டு, அரசு வேலையில் சேர்ந்து மாதாமாதம் அரசு சம்பளத்தில் சுகமாய் வாழும் அதிகார வர்க்கம், தன் கடமையைச் செய்யாமல், கூடுதலாக ஊழல், லஞ்சம், முறைகேடு என்று அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் நிலையில் இவர்களை தீவிரவாதிகளே என்று உரக்க அழைக்கலாம். இவர்கள் நாட்டு நலனில் அக்கறை கொள்வதில்லை. ஏனெனில், சமீப காலங்களில் தினசரி செய்திகளில் முகங்காட்டும் குற்றவாளிகள் பலரும் அரசுத் துறையைச் சார்ந்தவர்களே. கை நீட்டி வாங்கும் சம்பளத்திற்கான கடமையைச் செய்ய லஞ்சம். இப்படிப்பட்ட, 'நமது அன்பிற்கும், பாசத்திற்கும்', உரிய அன்பு அதிகாரவர்க்கம் ஒரு படி மேலே போய் தனது குடும்பத்தைக் கூட பிறரிடம் இழக்கத் தயங்கமாட்டார்கள். இம்மாதிரியானவர்கள் தீவிரவாதிகளுக்கு ஒப்பானவர்களே. நாகரீகம் தெரியாத, குறைவான கல்வியறிவு கொண்ட, சமூகத்தை வேறு விதமான கண்ணோட்டத்துடன் அணுகுகின்ற, எளிதில் தவறான கொள்கைகளுக்கு படிந்து போகும் தீவிரவாதிகள் இந்த உலகத்திற்கே உடனடி விஷம் என்றால், கடமையைச் செய்யாமலும், அதனால் சமுதாயத்தில் ஏற்படும் சிரமங்களைப் பற்றி அறிந்தும் கவலை கொள்ளாமலும் உள்ள இவர்கள் தாமதமாகக் கொல்லும் விஷம். தீவிரவாதிகள் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் எனில், இந்த தவறான செயல்களில் ஈடுபடும் அதிகார வர்க்கமும் களை எடுக்கப்பட வேண்டியவர்களே. உழைக்கத் திராணியற்று, பிறரிடம் கை ஏந்துபவர்களை பிச்சைக்காரர்கள் என்றால், உதவித் தொகையில் படித்து, வேலைவாய்ப்பு பெற்று, நல்ல வருமானம் இருந்தும், கடமையைச் செய்ய காசு கேட்கும் இவர்களுக்கும் பெயர் பிச்சைக்காரர்களே. எனவே, நம் நாட்டில் தீவிரவாதிகளும், பிச்சைக்காரர்களும் அதிக அளவில் இருக்கிறார்கள் என்று சொல்லலாமா? இந்த கட்டுரையை படிக்க நேர்ந்த எந்த ஒரு அரசு அதிகாரியும் தான் உத்தமர் தானா? என்பதை தன் இதயத்தின் மீது கைவைத்து தன் மனசாட்சியினைக் கேட்டுக் கொண்டால் நல்லதே. உண்மையில், ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது. 'அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்' என்று. ஆனால், இன்றைய தேதிகளில் நடக்கும் பெரும்பான்மை நிகழ்வுகள் ஒரு விஷயத்தை அழுத்தமாக பதிவு செய்துகொண்டிருக்கிறது. 'உதவிகள் எவருக்கும் செய்ய இயலாது போனாலும்,உபத்திரவங்கள் எவருக்கும் செய்யாதீர்','மனசாட்சி எனும் உங்களுக்குள்ளாக உறையும் இறை சக்திக்கு பணிந்து வாழுங்கள்', 'இன்று நம்மால் முடிகிறது என்பதற்காக எவர் வாழ்வையும் கெடுக்காதீர்கள், உங்களை மேலே ஒருவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான், உங்களை கெடுப்பதற்காக' என்பதைப் போல, அவரவர் செய்ய வேண்டிய கடமைகளை செய்யுங்கள், அதுவே உங்களை ஏந்திக் கொண்டிருக்கும் இந்த பூமித் தாயை மதிப்பதாகும்.