Sunday, October 31, 2010

தேவை உடனடி மரணதண்டனை

 கோவையில் கடத்தப்பட்ட துணிக்கடை அதிபரின் மகள் உடல், வாவிபாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் நேற்று மீட்கப்பட்டது; பல்லடம் அருகே  சிறுவனின் உடல் கிடைத்தது. குழந்தைகளைக் கொலை செய்த கார் டிரைவர் மோகனை கோவை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.
கோவை, காத்தான்செட்டி சந்தில் வசிப்பவர் ரஞ்சித்குமார் ஜெயின்(40); சுக்ரவார்பேட்டை பகுதியில் துணிக்கடை நடத்துகிறார். இவரது மகள் முஸ்கின் (11), மகன் ரித்திக்(8). இருவரும் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் முறையே மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்தனர். நேற்று முன்தினம் காலை இருவரும் பள்ளிக்கு வேனில் செல்வதற்காக, வீட்டருகே நின்றிருந்தனர். வழக்கமாக வரும் வேனுக்கு பதிலாக, வேறு வேன் வந்து நின்றது. அதில், இருவரும் ஏறிச் சென்றனர். வேன் சென்ற சில நிமிடங்களில் வழக்கமாக வந்து செல்லும் வேன் வந்தது. பயணத்துக்கு குழந்தை வராததால் வேன் டிரைவர், ரஞ்சித்குமார் ஜெயினை மொபைல் போனில் தொடர்பு கொண்டு விவரம் கேட்டார். தான் வியாபார விஷயமாக வெளியூரில் உள்ளதாகக் கூறிய அவர், உடனடியாக தன் வீட்டாரை தொடர்பு கொண்டு கேட்க, குழந்தைகள் இருவரும் வேனில் பள்ளிக்குச் சென்று விட்டதாக தெரிவித்தனர். திடுக்கிட்ட ரஞ்சித்குமார், குடும்பத்தாரை உஷார்படுத்தி வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளிக்கச் செய்தார். இதையடுத்து, மாநகர போலீசார் வாகனச் சோதனையில் தீவிரமாக ஈடுபடத் துவங்கினர்.

போலீசாரின் பல்வேறு கட்ட விசாரணையில், குழந்தைகளை கடத்திச் சென்றது, அவர்கள் வீட்டில் முன்னர் வேலை பார்த்த கார் டிரைவர் மோகன் என்பது தெரியவந்தது. மோகனை பிடித்து போலீசார் விசாரித்ததில், குழந்தைகள் இருவரையும் கடத்தி, உடுமலை அருகே உள்ள தளி பி.ஏ.பி., வாய்க்காலில் வீசியதாக தெரிவித்தார். போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல், சுல்தான்பேட்டை பி.ஏ.பி., வாய்க்காலில் குழந்தைகளை தேடி வந்தனர். நேற்று காலை 8.45 மணியளவில் வாவிபாளையம் பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீரில் முஸ்கின் பிரேதம் மிதந்தது. பிரேதத்தை, சுல்தான்பேட்டையைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சதீஷ்குமார்(27), தண்ணீர் ஊற்றும் பரமன் (27) ஆகியோர் மீட்டு தண்ணீரில் அடித்துச் செல்லாதபடி, வாய்க்கால் கரையில் கயிற்றை கட்டி, அதை முஸ்கின் கையில் கட்டினர்.

இதுகுறித்து துணை கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர். வாவிபாளையம் வந்த அவர், முஸ்கின் உடல் மீட்கப்பட்டது குறித்து கமிஷனர் சைலேந்திரபாபுவுக்கு தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு கமிஷனர் வந்த பின், முஸ்கின் பிரேதம் வாய்க்காலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.போலீஸ் குழுவினர், வாவிபாளையம் பகுதி பி.ஏ.பி., வாய்க்காலில் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்று ரித்திக் உடலை தேடும் பணியில் ஈடுபடத்துவங்கினர். இந்நிலையில் சிறுவனின் உடல் பல்லடம் அருகே வாய்க்காலி்ல் இருந்து கண்டெடுத்தனர். ரஞ்சித்குமாரின் உறவினர்கள், வாவிபாளையம் பி.ஏ.பி., வாய்க்கால் பகுதியில் குவிந்திருந்தனர்.

முஸ்கின் உடலில் எவ்விதமான காயமும் இருந்த தடயம் தெரியவில்லை. இருப்பினும் முஸ்கின் கொலை செய்யப்பட்டு பி.ஏ.பி., தண்ணீரில் வீசப்பட்டாரா அல்லது பிடித்து தள்ளப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ரஞ்சித்குமாரிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மோகன், குழந்தைகளை கடத்தியுள்ளான். அந்த எண்ணம் ஈடேறாது என நினைத்த மோகன், தன்னை குழந்தைகள் காட்டிக் கொடுத்து விடுவரோ என அஞ்சி, இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளான்.

கொலை செய்த இடத்தில் நடித்துக் காட்டிய டிரைவர்: ""குழந்தைகளுடன் விளையாடிய பின், அவர்களை கால்வாயில் தள்ளிவிட்டு வந்தேன்,'' என கைதான டிரைவர் தெரிவித்துள்ளான். குழந்தைகளை கடத்தி, பணம் கேட்டு மிரட்டி, சம்பாதிக்கலாம் என டிரைவர் மோகன்ராஜ், அவனது நண்பன் பொள்ளாச்சி கோட்டூர் மலையாண்டிபட்டணம் மனோகரனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளான். அதற்கென நேற்று முன்தினம் காலை பள்ளிக்குச் செல்ல தயாராக இருந்த குழந்தைகளை கடத்தினான். பொள்ளாச்சி வந்து, மனோகரனை மொபைல் போனில் அழைத்தான். மனோகரனை தொடர்பு கொள்ள முடியாததால், பொள்ளாச்சியிலிருந்து நா.மூ., சுங்கம் வந்து, அங்கிருந்து ஆனைமலை - எரிசனம்பட்டி - பழநி சாலையில் வந்தான். தொடர்ந்து மனோகரனை தொடர்பு கொள்ள முடியாததால், பகல் 2 மணியளவில் மெயின் ரோட்டிலிருந்து பி.ஏ.பி., பிரதான கால்வாய் சாலையில் வடக்கு நோக்கி காரை ஓட்டி வந்தான்.

பகல் 2.30 மணியளவில் குழந்தைகள் பசிக்கு அழுததால், கால்வாயில் 8.3வது கி.மீட்டரில், பூலாங்கிணர் கிளை கால்வாய் பிரியும் இடத்தில் குட்டை கருப்பராயன் கோவில் அருகே காரை நிறுத்திவிட்டு, குழந்தைகளை சாப்பிட வைத்தான். பின்னர் சிறிது தூரத்தில் ஷட்டர் மற்றும் வாய்க்காலில் இறங்கும் படிக்கட்டுகள் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று, அமர வைத்து விளையாடினான். அப்போதும், மனோகரனை தொடர்பு கொண்டும் பயனில்லாததால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு திரும்பச் சென்றாலும் சிக்கல் என நினைத்து, கரையில் அமர்ந்திருந்த குழந்தைகளை திடீரென வாய்க்கால் தண்ணீரில் தள்ளினான்.

குழந்தைகள் அலறியவாறு, உயிருக்கு போராடியும் மனம் இளகாமல் வேடிக்கை பார்த்தான். சிறிது நேரத்தில் குழந்தைகள் நீரில் மூழ்கினர். பின்னர், வந்த வழியிலேயே கோவைக்கு திரும்பிச் செல்லும் போது போலீசில் சிக்கினான்.குற்றவாளியைப் பிடித்த போலீசார் நேற்று முன்தினம் இரவு, அதே வழித்தடத்தில் அழைத்து வந்தனர். போலீசாரிடம், மிரட்டி பணம் சம்பாதிக்க கடத்தியது, நண்பனுடன் திட்டமிட்டது, வந்த வழித்தடம், சம்பவம் நடந்த இடம், கொடூர மனதுடன் தண்ணீரில் தள்ளிவிட்டு கொலை செய்த விதம் குறித்து போலீசாருக்கு நள்ளிரவு 2.30 மணிக்கு மோகன் விளக்கினான்.

தகவல் கொடுத்த விவசாயி: உடுமலை அருகேயுள்ள சர்க்கார்புதூர் கிராமத்திலுள்ள பி.ஏ.பி., பிரதான கால்வாயில், குழந்தைகளின் புத்தக "பேக்' மிதந்து சென்றதை நேற்று முன்தினம் மாலை பார்த்த விவசாயி சவுந்தரராஜன், பேக்கை மீட்டார். அதிலிருந்த பள்ளி போன் நம்பருக்கு தகவல் கொடுத்தார். பி.ஏ.பி., பிரதான கால்வாய், திருமூர்த்தி அணையிலிருந்து 148 கி.மீ., நீளமுடையது. அதில், வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருந்ததோடு, இரவு நேரமானதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இரவு முழுவதும் வாய்க்கால் கரை ஓரத்திலேயே தேடும் பணி நடந்ததோடு, ஷட்டர்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் தேடுதல் பணி நடந்தது. இரவு முழுவதும் தேடியும் குழந்தைகளின் சடலங்கள் சிக்கவில்லை. நேற்று அதிகாலை தேடும் பணிக்காக பிரதான கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. உடுமலை சர்க்கார்புதூர் வாய்க்கால் கரையில் உள்ள குட்டை கருப்பராயன் கோவிலில், சாப்பாடு பேக் இருந்ததை போலீசார் மீட்டனர். அதில், சப்பாத்தி, திராட்சை மற்றும் முட்டைகோஸ் பொரியல் ஆகியவை இருந்தன. இதில், கொஞ்சம் மட்டும் சாப்பிடப்பட்டிருந்தது. வாய்க்காலின் கடைசி பகுதியான சுல்தான்பேட்டை வாவிபாளையம் பகுதியில், பெண் குழந்தை முஸ்கினின் சடலம் மட்டும் மீட்கப்பட்டது. 

குழந்தைகளை கடத்தி கொலை செய்த கொடூர கொலைகாரன் சிறையில் அடைப்பு: பணம் பறிப்பதற்காக குழந்தைகளைக் கடத்திய மோகன்ராஜ் போலீசில் பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில், குழந்தைகளைக் கால்வாயில் தள்ளி விட்டுக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.  தப்பியோட நினைத்த மோகன்ராஜை , போலீசார் நேற்று முன் தினம் இரவில் சுற்றி வளைத்துப் பிடித்தனர். நேற்று முழுவதும் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது.கோவை மாநகர காவல்துறை கமிஷனர் சைலேந்திரபாபுவின் உத்தரவின்பேரில், நேற்று அவனை கைது செய்த வெரைட்டிஹால் போலீசார், அவன் மீது கொலை வழக்கு மற்றும் கடத்தல் வழக்குகள் பதிவுசெய்தனர். நேற்று இரவு 10.45 மணிக்கு, ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தியின் முன்பாக மோகன்ராஜை போலீசார் ஆஜர் படுத்தினர். வரும் 12ம் தேதி வரையிலும் அவனை "ரிமாண்ட்' செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.அவனது முகத்தில் கருப்புத் துணியைச் சுற்றி, பலத்த பாதுகாப்புடன் அவனை அழைத்துச் சென்ற போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஈவு இரக்கமின்றி, அப்பாவிக் குழந்தைகளை கொலை செய்த மோகன்ராஜூவுக்கு ஆதரவாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எந்த வக்கீலும் ஆஜராவதில்லை என முடிவெடுத்திருப்பதாக வழக்கறிஞர் வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி: தினமலர்.காம்

படித்துவிட்டீர்களா ?

என்ன கொடுமை இது? பணத்துக்காக என்னவேண்டுமானாலும் செய்வார்களா? அப்படிஎன்றால் தன் தாய், சகோதரி, மனைவி இப்படியாக, பணம் வருகிறதே என்பதற்காக தகாத வழிகளில் பயன்படுத்திக் கொள்வார்களா? இந்த தமிழ்நாடு எதை நோக்கி போகின்றது? இந்த இரண்டு குழந்தைகளைக் கொள்ள இந்த கொடூரனுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ? ஏற்கனவே மும்பை, கர்நாடகா போன்ற இடங்களில் மதராசி என்று ஒட்டு மொத்த தமிழனையும் கேவலமாகப் பார்க்கும் மனப்பான்மை நிலவுகிறது. இம்மாதிரியான செயல்கள் நம்மை தலை குனிய வைக்கின்றது அல்லவா? இரண்டு குழந்தைகளையும் கொன்ற மோகன்ராஜ் சார்பாக எந்த வக்கீலும் வரவில்லை என்பது ஆறுதலான செய்தி. காரணம், மும்பை தீவிரவாத தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்த கசாப் போன்ற அரக்கர்களுக்கு இந்திய அரசு பதிலடி தராமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் வக்கீல் தொழிலின் தர்மம் என்று எவருக்கு வேண்டுமானாலும் வாதாடும் சிலரின் 'நேர்மை' யான சிந்தனைகளுள் வக்கீல் தொழிலின் உண்மையான தொழில் தர்மம், நியாயங்களுக்கு துணை போவதுதான் என்ற அடிப்படையில் வைத்துப் பார்த்து, இந்த அரக்கன் மோகன் ராஜுக்கு எந்த வக்கீலும் வாதாட தயாராக இல்லை என்கிற செய்தி ஆறுதல் தான். ஆனாலும், இன்னும் நடப்பதை பார்ப்போமாக!


அரபு நாடுகளில் இம்மாதிரி செயல்களில் ஈடுபடுவோருக்கு பொதுமக்கள் முன்னிலையில் அனைவரும் குலை நடுங்கும் விதமாக மரண தண்டனை நிறைவேற்றுவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதே போல இந்தியாவிலும் தண்டனைகள் மிகக் கடுமையானதாக இருக்கவேண்டும். குழந்தைகளின் மரணம் பெற்றவர்களை எப்படியெல்லாம் பாதித்திருக்கும். இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் சகஜ நிலையை அடைய எத்தனை நாட்கள் பிடிக்கும் தெரியுமா? குழந்தை பெற்றவர்களுக்கே இதனை முழுமையாக உணர முடியும்.


மற்றும், மோகன் ராஜை போலீசார் விசாரிக்கும் போது தெரிய வந்த செய்தி என்ன தெரியுமா?  சிறுமி முஸ்கானை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியபிறகே கொன்றுள்ளான். இப்படிப்பட்ட இவனை, சித்தரவதை செய்து கொல்ல வேண்டும். இவனது மரணம் மிக சாதாரணமாக இருக்கக் கூடாது. எப்போதும் போல ஆயுள் தண்டனை, பின்பு, நன்னடத்தை என்று சொல்லி தலைவர்களின் பிறந்த நாளை காரணம் காட்டி விடுதலை என்றெல்லாம் சொன்னால் இந்தியாவின் மற்ற மாநில மக்கள் நம்மை பார்த்து கைகொட்டி சிரிப்பார்கள்.    கொடூரமாக கொலை செய்வோருக்கேல்லாம் தண்டனை கொடூரமாகத்தான் இருக்க வேண்டும். அப்போது தான் நீதித்  துறையின்   மேல் சாமான்ய மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நீட்டித்துக் கொள்ள முடியும். 

மோகன்   மற்றும் அவனது நண்பர்கள் என எவனாக இருந்தாலும் சுடச் சுட  தண்டனை நிறைவேற்றும்படியாக  இருத்தல் அவசியம். அப்படியல்லாமல் விசாரணை, சிறை, பின்பு கருணை மனு, யோசிக்காமல் செய்துவிட்டேன் என்ற புலம்பல்கள், பொதுமக்களின் போராட்டம்  என்று மீடியாக்களின் செய்திப்பசிக்கு தீனி போட்டு கடைசியாக மக்களின் கவனத்தில் இருந்தே இம்மாதிரி நிகழ்ச்சிகளை மறக்கடிப்பது என்று சராசரி தண்டனை என்று இல்லாமல் புதுவித தண்டனையாக இருக்கவேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் இம்மாதிரியான கொடூரங்கள் நிகழாமல் இருக்கும். மோகன் என்ற இந்த கர்ண கொடூரன் எந்த சமுதாயத்தை சார்ந்தவனோ அந்த சமுதாயத்துக்கே அவப்பெயரை உண்டாக்கிவிட்டான் என்பதை அனைவரும் உணரவேண்டும்.   தமிழகத்தில் எத்தனையோ அதிகாரிகள், அரசியல்வாதிகள் இருக்கின்றனர். தங்கள் வீட்டில் இப்படியொரு கொடுமை நேர்ந்திருந்தால் என்ன செய்திருப்பார்களோ அதை செய்தாக வேண்டும். அதை விடுத்து யாருக்கோ தானே, சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சராசரியாக இன்று இருப்பார்களேயானால், ஒட்டுமொத்த இந்தியாவிலும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என என்னால் ஆருடம் சொல்ல முடியும். அதிகாரத்தை கையில் வைத்திருப்போர் யோசிக்க வேண்டிய தருணமிது!