Thursday, November 4, 2010

படிக்கட்டு பயணம் நொடிப்பொழுதில் மரணம் !

தலைப்பே வசனமாகத்தான்  இருக்கிறது அல்லவா? நிறைய உள்ளூர் பேருந்துகளில் இப்படித்தான்  எழுதி வைத்திருப்பார்கள். கவனித்துப் படித்தால் தெரியும். பேருந்து பயணம் ஊர்களைக் கடக்கத்தானே தவிர நம் உயிரையே இழக்க அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். மற்ற மாநிலங்களில் எப்படியோ அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால், தமிழகத்தில் கிராமங்கள், நகரங்கள்  என பாகுபாடு இல்லாமல், அரசு, தனியார் பேருந்துகளில் தினசரி நடக்கும் கதைதான் இது. கிராமங்களில் ஓடும் பேருந்துகளில் ஏறும்/இறங்கும் வழிகளில் கதவு பொருத்தும் வசதி இருப்பதில்லை. குறைவான பேருந்துகள் என்கிறபோது மக்கள் அதனை சார்ந்து இருக்கின்றனர் என்கிற நிலையில் கூட்டம் அதிகம் என்கிற பட்சத்தில் படிக்கட்டு பயணம் என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது. ஆனால், நகர வாசிகளுக்குமா தேவை படிக்கட்டு பயணம்? பொதுவாக, சென்னை - ஐ உதாரணமாகக் கொள்வோம்.

பொதுமக்கள் மற்றும் பள்ளி/கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பயணிக்கும் போது நடக்கும் கூத்துகளையும், அவர்கள் அடிக்கும் கூத்துகளையும் தினசரி நாம் வேடிக்கை பார்க்கலாம். அரசு எடுத்த முயற்சிகளின் பலனாக பேருந்துகளில் கதவு பொருத்தப்பட்டதின் விளைவாக  ஓரளவு படிக்கட்டுப் பயணம் குறைந்திருந்தாலும், பெரும்பான்மை பேருந்துகளில் இம்மாதிரி பயணங்கள் குறைவதில்லை. அவ்வளவு ஏன்? பேருந்தின் உள்ளே நிற்பதற்கான இடம் இருந்தாலும், படிக்கட்டில் பயணம் செய்வதில் தான் சுகம் இருப்பதாக பலர் கருதுகின்றனர். விளைவு, பேருந்து,  குண்டும் குழியுமான சாலையின் காரணமாக தடுமாறும் போது படிக்கட்டில் பயணிப்போர் கீழே தவறி விழுந்து விபத்துக்கு  ஆளாகின்றனர்.

மற்றும், சில வாரங்களுக்கு  முன்பாக, சென்னை கோயம்பேட்டிலிருந்து, திருவொற்றியூர் செல்லும் பேருந்தில் பயணிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அரும்பாக்கம் வந்ததும், கல்லூரி மாணவர்கள் நிறைய பேர் பேருந்தில் ஏறினார்கள். ஆரம்பித்தது தொல்லைகள். இசைஞானி இளையராஜா, ரஹ்மான், தேவா என பலர் அந்த கூட்டத்தில் தென்பட்டனர். வாத்தியங்கள் ஏதுமில்லாத அவர்களின் கைகளுக்கு பேருந்தின் படிக்கட்டுப் பகுதி மற்றும் கூரை அவர்களின்  வாத்தியமாக மாறியது. ஒரே குத்துப்பாட்டு சத்தத்தில் பெண்களை குறித்து பாடல்கள். காதுகளை நாம் பொத்திக்கொள்ள வேண்டும். பேருந்தில்  எவரும், டிரைவர், கண்டக்டர் உட்பட, தட்டிக் கேட்கவில்லை. பொதுவாக, மாணவர்கள் சுற்றுலா செல்லும் பேருந்தாக இருப்பின் மகிழ்ச்சியின் காரணமாக பாட்டு, ஆட்டம் என களை கட்டும். தவறில்லை. ஆனால், பொதுமக்கள் பலரும், பிறந்து சில வாரங்களே ஆன குழந்தைகள், வயது மூத்த பெரியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள், குறிப்பாக இதய நோயுள்ளவர்கள், மரணத்தில் கலந்துகொள்ள செல்பவர்கள் என பலரும் பயணம் செய்யும் பேருந்தில், பள்ளி/கல்லூரி மாணவர்கள் செய்யும் இம்மாதிரி கலாட்டாக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. அளவுகள் மீறும் போது தண்டிக்கப்பட வேண்டியவை.

நரகத்தை உண்மையில் அனுபவிக்க ஆசைப்படுபவர்கள் சென்னை போன்ற நகரங்களில் ஓடும் சாதாரண பேருந்தில் பயணம் செய்து பார்த்தால் இவ்வகை நரக வேதனையை அனுபவிக்கலாம். பேருந்தில் மூச்சு விடக்கூட முடியாத நிலையில், இந்த இம்சை அரசர்கள் வேறு, படுத்தும் பாடு, நரகம் என்றால் என்ன என்பதை நமக்கு காட்டும். இளவயதுக்காரர்கள் என்றால் விளையாட்டு, காமெடி, குசும்பு இருக்க வேண்டியது தான். இவை எங்கே காட்டப்பட வேண்டும் என்பதெல்லாம் வரையறை இருக்கிறது. இவர்களின் திறமைகளை  எங்கு காட்ட வேண்டுமோ அங்கே காட்டினால் நல்லது. பெரியவர்கள் சொல்வார்கள், இடம், பொருள், காலம் என்று. இந்த வாசகம் எந்த காலத்திற்கும் பொருந்தும்.  இதைப்படிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள் தங்கள் பிள்ளைகள் / தங்கள் மாணவர்களை இம்மாதிரி விஷயங்களில் ஈடுபடாமல் தவிர்க்க அறிவுறுத்த  வேண்டும்.  

மற்றும், ஒரு பேருந்து என்று எடுத்துக் கொண்டால், ஓட்டுனர் பல விஷயங்களுக்கும் பொறுப்பாகிறார். நாம் பயணிக்கும், தூரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்திவிட்டு நாம் சென்றடைய வேண்டிய இடத்திற்கு நேரத்தோடு, பாதுகாப்பாக செல்லும் பொறுப்பை ஓட்டுனர் மீது திணித்துவிட்டு பயணிக்கிறோம். ஆனால், ஓட்டுனர், தான் செலுத்தும் பேருந்தை முழுதாக பாதுகாத்தாக வேண்டும், அனைவரையும் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கவேண்டும், நேரத்தோடு சேரவேண்டிய இடத்தை அடையவேண்டும், சாலையில் செல்வோரின் பாதுகாப்பையும் கவனித்தாக வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாம் நமது பாதுகாப்பைக் கூட கருத்தில் கொள்ளாமல், நம்மை சார்ந்திருக்கும் குடும்பத்தினரைக் கூட எண்ணிப்பாராமல், செய்கின்ற படிக்கட்டுப் பயணம் நம்மை மரணப்பாதைக்குத்தான் இட்டுச் செல்லும். மற்றவர் தன்னை ஹீரோவாக எண்ணவேண்டும் என்கிற மனப்பான்மைத்தான் இளையவர்களை இப்படியெல்லாம் செய்யத்  தூண்டுகிறது. அதே நேரம், தவறி விழுந்துவிட்டால், உடல் காயம், சிகிச்சை, செலவுகள், உடல் வலி  என எவ்வளவு பிரச்னைகள். எண்ணிப்பாருங்கள்! இதைவிட, தவறி விழுந்தவர் இறந்துவிட்டால், சம்பந்தமில்லாமல் ஓட்டுனர், நடத்துனருக்கு எவ்வளவு பிரச்னைகள். அதையும் விட, இறந்துபோனவரின் குடும்பம் எப்படியெல்லாம் பாதிக்கும்? இதையெல்லாம் உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் நலமே!


இன்னும் ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். பேருந்து பயணத்தை பலர் எதற்காக பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, உரசல் சுகம் காணவும், தன்னை அஜித், விஜய் போல மற்றவர்கள்  எண்ணவேண்டும் என்கிற ஆதங்கத்திலும், செய்கின்ற சேட்டைகள், சிலுமிஷங்கள் பலப்பல. அந்த வகையில், பொதுவாக ECR என்று சொல்லப்படுகின்ற சாலை வழியைப் பயன்படுத்தும் பேருந்துகளில் நடக்கும் அநியாயங்கள்  எத்தனையோ! இந்த தமிழகம் தண்ணீரில் நடந்து செல்கிறது என்று சொல்லும் அளவுக்கும், தண்ணீரால் தான் வாழ்கிறது என்று நிதிநிலை சொல்லும் அளவுக்குமாய் ஆகியுள்ளது. இதனால், அளவுக்கு அதிகமான தண்ணீரின் நடமாட்டத்தில் எத்தனையோ 
இளைஞர்கள் பாதை தவறி போகின்றனர். இவர்கள்  செய்யும் அட்டூழியங்கள்    
எல்லை மீறிப் போகின்றன.  பேருந்துகளில் விலை மலிவான மொபைல் போன்களில் விரசமான பாடல்களை ஒலிக்கவிட்டு மற்றவர்களை தொந்தரவு செய்வதும், போதை தலைக்கேறிய நிலையில் பெண்களிடம் பேருந்திலேயே தவறாக நடக்க முயற்சி செய்வதும் சமீப காலங்களில் தொடர் கதையாய் ஆகியுள்ளது.
 
பேருந்தில் பயணிக்கும் யார்க்கும் இதைத் தட்டிக் கேட்க ஆர்வமோ, துணிவோ வருவதில்லை. பாதிக்கப்படும் நபர் பற்றி அப்படி யாரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. காரணம், நமக்கேன் வம்பு என்கிற நிலையில் அலட்டிக் கொள்ளாமல் தன் பயணத்தைத் தொடர்கின்றனர். ஆனால், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், என்றோ ஒரு நாள், தன் தாயோ, தங்கையோ, அக்காவோ, மனைவியோ, உறவினரோ, காதலியோ, மகளோ பாதிக்கப்படுவார்கள்  என்பதை. தீயை ஆரம்பத்திலேயே அணைத்தால் தான் பரவாமல் தடுக்க முடியும். தன் ஊரில், அடுத்த தெருவில் தானே, தீ பற்றி எரிகிறது என்று சும்மா இருந்துவிட முடியாது. காற்று மாறினால், நம் வீட்டிற்கும் தீ அழையா விருந்தாளி ஆகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சமுதாயத்தில் முளைக்கும் இம்மாதிரி வேதனையான விஷயங்கள்  கிள்ளி எறியப்பட வேண்டும். இல்லையென்றால் நச்சு செடியாய் முளைத்து நாசம் செய்துவிடும். ஈவ் டீசிங் செய்யப்பட்டு அதனால் ஒரு உயிர் போன பின்னர்தான் உலகமே பேசுகிறது. ஆனால், தினம் தினம் மற்றவர்களிடம் சொல்லிக் கொள்ளமுடியாத எத்தனையோ ஈவ் டீசிங் சமாச்சாரங்கள் தினமும் நடந்தேறுகின்றன. தவறு செய்தவன் எந்த கொம்பு முளைத்த மிருகமாய் இருப்பினும், கொம்பு உடைக்கப்பட  வேண்டும். இல்லையேல், அந்த கொம்பு மற்றவரை காயப்படுத்திக் கொண்டு தான் இருக்கும்.