Sunday, October 17, 2010

அதிர்வுகள்

இன்றைய இரவு (17.10.2010)  கேப்டன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட "அதிர்வுகள்", நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் அருகாமையிலுள்ள ஆனைமலை பெருமாள் கோயில் மலை பற்றிய தகவல்கள் தரப்பட்டன. பழம் பெருமை வாய்ந்த நினைவுச்  சின்னங்களை தமிழக  அரசு எவ்வளவு அரும்பாடு பட்டு அல்லும் பகலும் எவ்வளவு சிரத்தையுடன் பாதுகாத்துவருகிறது என்பதை மிக அழகாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர். உலகம் வெப்பமயமாதல் பற்றி உலக மக்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற்றாக வேண்டிய இந்த கால கட்டத்தில் இயற்கையின் அடி வயிற்றில் அடிக்கும் விதமாக அழகு  ததும்பும்  மலையை காகித நோட்டுக்கட்டுகளில் தினம் புரளும் கயவர் கூட்டங்கள் குவாரி என்ற பெயரில் வெடி வைத்து தகர்த்து வியாபாரம் நடத்திக் கொண்டுள்ளதை படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். இம்மாதிரி கூட்டங்கள் நடத்தும் சமூக விரோத செயல்கள் அரசு அறியாததா என்ன? இயற்கையை சீண்டுவதன்  மூலம் எதிர்காலத்தில் நடக்கப்போகும் அபாயங்களை இவர்கள் அறியாதவர்களா என்ன? தன் வயிறு நிரம்பினால் மட்டும் போதும் என்கிற இம்மாதிரி கூட்டங்களை தடுத்திட, ஒரு விதத்தில் சொல்லப்போனால் அந்த நாராயணன்தான் வந்தாக வேண்டும். மனிதர்கள் தவறு செய்யும் போதெல்லாம் இயற்கை அதற்குரிய பாடங்களை அவ்வப்போது கற்றுக் கொடுத்ததும் இவர்கள் திருந்தவில்லைஎன்றால் இவர்களின் முடிவு இறைவனின் கையில் தான் என்பதை இவர்கள் ஏனோ உணர மறுக்கின்றனர். ஆனால், இம்மாதிரி சமூக அக்கறை இல்லாத ஜடங்களின் முடிவு  வெகு கோரமாகத்தான் இருக்கும். இம்மாதிரியான இயற்கையை சீண்டும் வேலைகள் நாடு முழுமைக்கும் இருக்கத்தான் செய்கிறது. மக்களின் நலன் கருதும்  அரசுகளாக தங்களை விளம்பரம் செய்துகொள்ளும் இவர்கள் மக்களின் நலன் நாடுபவர்கள்தானா என்றால் நிச்சயம் இருக்காது. பண பலம் கொண்ட ஒரு சில குடும்பங்கள் வாழ எத்தனையோ ஏழை மக்களின் வசிப்பிடங்கள், வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. திட்டமிட்டே மக்களுக்குள் ஜாதி, இன, மதக் கலவரங்கள் உருவாக்கப்படுகின்றன. நாமெல்லாம் 2020 ல் இந்தியா வல்லரசாக ஆகும் என நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அதைவிட நல்லரசாக இருக்க வேண்டுமென்பதே பெரும்பான்மையோரின் எண்ணமாக இருக்கும். இந்தியத் தலைவர்கள் நம்மை வழி நடத்திச் செல்வார்கள் என்று நம்புவோமாக! ஒட்டு வங்கிகளாக மட்டும் மக்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் எல்லோரும் நல்வாழ்வு வாழ வேண்டுமன்ற எண்ணம் கொண்ட தலைவர்கள் தான் இந்தியாவிற்குத் தேவை. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனையே கடிக்கும் பலம் கொண்ட தீய சக்திகள் அரசியல்வாதிகள் போர்வையில் உலா வருவதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொள்ளும் அதிகாரம் இருப்பதால்தான் உள்ளூர் பாஷையில் சொல்வது போல, மொள்ளமாரி, முடிச்சவுக்கி, எட்டப்பன் போன்ற சமூக விரோத கும்பல்கள் அரசு எந்திரங்களில்  புகுந்து கொண்டு நாட்டின் முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ளுகின்றனர். புறிந்துகொள்ளவேண்டியவர்கள் புரிந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே!