Thursday, October 7, 2010

சாலையிலே செல்லும்போது ....

தமிழகத்தைப்  பொறுத்த மட்டில்  பேசுவோம். இன்றைய தமிழகத்தில் சாலை வசதிகள் நல்ல நிலையிலேயே இருப்பதாக நம்புவோம். குறிப்பிட்ட வருடங்களுக்கும் முன்பாக சாலை வசதி நகர்ப்புறங்களில் தான் நன்றாக இருந்தது. ஆனால், கால மாற்றத்தில் தற்போது அதிக கிராமப்புறங்களில் கூட நல்ல சாலைவசதி உள்ளது. இதன் விளைவாக கிராமங்கள் தோறும் மினி பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. மற்றொரு புறம், இரு சக்கர வாகனங்களின் பெருக்கம் ஒரேயடியாக அதிகரித்துவிட்டது. ஆக, இரு சக்கரவாகனம், ஆட்டோ, மினி லாரி, மினி பேருந்து, பேருந்து, லாரி என வாகனப் பெருக்கம் அனைத்து சாலைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டன என்றால் மறுப்பு சொல்ல வாய்ப்பில்லை. இதன் விளைவாக தினசரி விபத்துக்களுக்கும் குறைவில்லை. கிராமங்கள், கிராமங்களை ஒட்டிய  நகர்ப்புறங்கள் என வரும்போது சாலைகள் பெரும்பாலும் வசிப்பிடங்களை ஒட்டித்தான் நீள்கின்றன. இதனால், பொதுமக்கள் சாலையை சாலையாகப் பார்க்கவில்லை. தங்களின் சொத்தாகப் பார்க்கின்றனர் போலும். இதனால், சாலையோரங்களில் அமர்ந்துகொண்டும், பிள்ளைகளை விளையாட விட்டும், கால்நடைகளை உலவவிட்டும் சாலை ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும், வாகனங்களில்  வருவோர் கவனக் குறைவாக வரும் போது விபத்துகள் நேரிடுகின்றன. உள்ளுர்வாசிகளின் எண்ணம் இதுவாகத்தான் இருக்க முடியும்..." இது என் ஊர். எவர் என்னை மோதிவிட்டு ஓடிவிட முடியும்? அப்படியே மோதிட்டாலும் விட்டிடுவோமா?". விபத்து ஏற்பட்டு அதனால் ஏற்படும் செலவை வண்டியோட்டி ஒத்துக் கொண்டாலும், உடல்வலி, மருத்துவமனையில் செலவிடும் நேரம், செயலிழப்பு என்று எவ்வளவு தொல்லைகள்?  கிராமங்கள் என்று மட்டுமில்லாமல், நகரங்களிலும் இப்படித்தான். சாலையை கடக்கும் போது இரு பக்கமும் பார்த்து செல்லவேண்டும் என்பதை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள்? வீட்டில் கூட நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது. நம்மை சுற்றி எந்தளவு வசதிகள் இருக்கின்றனவோ அவ்வளவும் சரியான நிர்வாகம் இல்லையென்றால் ஆபத்துகளாய் உருவெடுத்துவிடும். ஈரம் கொண்ட கைகளுடன் மின்சார சுவிட்சுகளை தொட்டால் என்ன ஆகும்? அப்படியிருக்கும்போது வீட்டை விட்டு வெளியில் இருக்கும் போது எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? உள்ளூர்காரன் என்றால் பேருந்து மோதி விட்டால் சாக மாட்டானா என்ன? நண்பர்களே, சகோதர சகோதரிகளே! உங்கள் ஊர் என்றாலும் வரும் வாகனங்களுக்கு  வழியை விடுங்கள். அடுத்தவர் அவசரத்தைப் புரிந்து கொண்டு வாழுங்கள். சாலை என்பது போக்குவரத்திற்கு மட்டுமே! பொழுதுபோக்கிற்கு அல்ல!

மீண்டும் விவாதிப்போம்!